lundi 17 avril 2017

சித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]


 
திருமால் வணக்கம்!
 
நீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது
நிலைகொண்ட நெடுமாலே வாராய்!
நேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு
நிறைகொண்ட தமிழள்ளித் தாராய்!
கூர்கொண்ட கருக்கொண்டு குளிர்கொண்ட வளங்கொண்டு
குழல்கொண்ட இசையள்ளிச் சேர்ப்பாய்!
குணங்கொண்ட சொற்கொண்டு மணங்கொண்ட நற்செண்டு
குடிகொண்ட அணியள்ளி வார்ப்பாய்!
பார்கொண்ட அடிகொண்டு! பண்கொண்ட உளங்கொண்டு!
பாக்கொண்ட என்மீது வைப்பாய்!
பனிகொண்ட விழிகொண்டு! பழங்கொண்ட மொழிகொண்டு!
பரந்தாமா ஒருபார்வை பார்ப்பாய்!
கார்கொண்ட உருவோனே! கனிகொண்ட அருளோனே!
கவியள்ளி என்நெஞ்சுள் பூப்பாய்!
தார்கொண்ட திருமாலே! சீர்கொண்ட செழுமாலே!
தாள்தொட்டுத் தொழுகின்றேன் காப்பாய்!
 
தமிழ் வணக்கம்!
 
சீர்பூத்த தமிழே..உன் பேர்பூத்த கவிபாடச்
சிங்காரச் சொல்லேந்தி ஆடு!
தேனாறு பாய்ந்தோடத் தீஞ்சோலை பூத்தாடச்
தெம்மாங்கு நடையேந்திப் பாடு!
ஏர்பூத்த நிலமாகக் கார்பூத்த வளமாக
என்மார்பில் அணியள்ளிச் சூடு!
என்னாளும் உன்பிள்ளை பொன்னான புகழ்மேவ
எழிலேந்திப் பூக்கட்டும் ஏடு!
நீர்பூத்த மரையாக நிலம்பூத்த மழையாக
நெஞ்சத்துள் தமிழே..நீ கூடு!
நெறிபூத்த நோக்கோடு நிறைபூத்த வாக்கோடு
நிலையாகத் தரவேண்டும் பீடு!
பார்பூத்த மொழியாவும் பயன்பூத்து நின்றாலும்
பண்பூத்த தமிழே..பூக் காடு!
பாட்டுக்கே அரசாக்கிப் பகையோட்டும் முரசாக்கிப்
பாரிவோடும் இங்கென்னை நாடு!
 
அவையோர் வணக்கம்!
 
தேனுாறும் தமிழ்நாடிச் சீரூறும் இசைநாடி
திரண்டிங்கு வந்தோரே வணக்கம்!
சிறப்பூறும் சான்றோரே! செழிப்பூறும் ஆன்றோரே!
செவிமேவி என்பாட்டு மணக்கும்!
மானுாரும் விழிகொண்டு மதுவூறும் மொழிகொண்டு
வந்துள்ள பெண்டீரே வணக்கம்!
மாண்பூறும் என்பாட்டு! மதியூறும் என்பாட்டு!
மழையாக நெஞ்சத்தை நனைக்கும்!
ஊனுாறும் உணர்வேந்தி வானுாரும் ஒளியேந்தி
உவப்பூறும் இளையோரே வணக்கம்!
உயர்வூறும் வண்ணத்தில் ஒலியூறும் என்சந்தம்
உள்ளத்தைத் தாலாட்டி அணைக்கும்!
நானுாறி உண்கின்ற மீனுாறும் குழம்பாக
நல்வாசம் என்பாட்டுக் கொடுக்கும்!
ஞாலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டு
நாள்தோறும் இனமோங்கப் படைக்கும்!
 
நண்பர் வணக்கம்
  
எங்கே தமிழின் ஏற்றம் ஒளிக்கும்
அங்கே வருகை அளிக்கும் அன்பா்க்கு
என்முதல் வணக்கம்! இன்பத் தமிழின்
பண்பில் வாழும் பாவை யர்க்குப்
பாட்டின் அரசன் பகன்றேன் வணக்கம்!
 
வள்ளுவர் கலையகம் வழங்கும் இவ்விழா
உள்ளம் உவக்க ஓங்கி ஒளிர்க!
 
சித்திரை திருநாள் முத்துரை இட்டே
இத்திரை கொண்ட நித்திரை போக்கும்!
 
இயற்கை மணக்கும் இளவேனி திருநாள்
மயக்கம் கொடுத்து மஞ்சம் விரிக்கும்!
 
விழாவை நடத்தும் வெற்றி மனங்களைப்
பலாவைப் பாடைத்துப் பகன்றேன் வணக்கம்!
 
சங்கத் தலைவர்! தமிழுளம் கொண்டவர்!
பொங்குபுகழ் ஓவியர்! எங்களின் நண்பர்!
அண்ணா மலையார்! அன்பு கமழும்
பண்ணார் தமிழில் படைத்தேன் வணக்கம்!
  
முத்துமன நெஞ்சர்! முடியப்ப நாதர்!
கொத்துமலர் தந்து குவித்தேன் வணக்கம்!
   
தலைவர் தசரசன் சால்பைப் போற்றி
அலைபோல் தொடர அளித்தேன் வணக்கம்!
   
குளிர்மன நண்பர்! குணவதி மைந்தன்!
வளமெலாம் காண வடித்தேன் வணக்கம்!
  
மங்கை எலிசாபெத் மகிழ்வுறும் வண்ணம்
அங்கை இணைத்து அளித்தேன் வணக்கம்!
 
என்றன் மாணவி இன்மலர் வாணி
இன்னும் சிறக்க இசைத்தேன் வணக்கம்!
 
உறவாய் உள்ள உயர்நட ராசன்
சிறப்பினை எண்ணிச் செப்பினேன் வணக்கம்!
 
நற்கவிப் பாவை நலமுடன் பாடச்
பொற்புடன் வாழ்த்திப் பொழிந்தேன் வணக்கம்!
 
அன்பின் அரசி அருமைச் சுமதியார்
என்றும் சிறக்க ஈந்தேன் வணக்கம்!
 
அணிபோல் தமிழை ஆக்கி அளிக்கும்
மணியன் செல்வி! என்றன் மாணவி!
எல்லா பேறும் ஏற்று வாழப்
பல்லாண்டு பாடிப் படைத்தேன் வணக்கம்!
 
நாட்டியம் ஆடி நம்மை ஈர்த்துக்
காட்டிய அன்பர்க்குச் கலைசேர் வணக்கம்!
 
என்னைப் போன்றே அன்னைத் தமிழை
நன்றே காக்கும் நல்லார்க்கு வணக்கம்!
 
கம்பன் உறவும் கவிதை உறவும்
இன்மண் செழிக்க இசைத்தேன் வணக்கம்!
 
இருகை தட்டி என்கவி போற்றும்
இரும்புக் கரத்தர்! அரும்பு மனத்தர்
இன்நட ராசர்! என்றன் மாணவர்!
பொன்மனம் மின்னப் பொழிந்தேன் வணக்கம்!
 
நண்பர் கோகுலன் நட்பினைப் போற்றி
பண்புடன் சொன்னேன் பசுமை வணக்கம்!
 
சீர்ப்பணி யாற்றும் சிவஅரி ஐயா
ஈரடி தொட்டே இசைத்தேன் வணக்கம்!
 
தங்கை கணவர் தமிழ வாணர்க்கு
நுங்கைக் கொடுத்து நுவன்றேன் வணக்கம்!
 
ஆதி நண்பர்க்கு ஓதினேன் வணக்கம்!
 
சோதியைப் போற்றும் துாய தோழன்
மல்லன் மகிழ வழங்கினேன் வணக்கம்!
 
வல்ல தமிழால் வணக்கம் உரைத்துக்
கவிதை வானின் கதவைத் திறந்தேன்
செவியுடை அன்பர் செழுந்தமிழ் பருகவே!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.04.2017

dimanche 16 avril 2017

வெண்பா மேடை - 45கரந்துறை வெண்பா

நிறைமொழி சூட்டி நிலமோங்கும் பெண்ணே!
மறைமொழி காட்டிமகிழ் மாதே! - துறைமொழி
யாளே! உயர்மாந்தர் ஏத்தும் பெருமையளே!
நாளே சுடர்விடும் நன்கு!

ஒரு செய்யுளில் மற்றொரு செய்யுள் மறைந்திருப்பது கரந்துறை செய்யுள் என்னும் மிறைக்கவியாகும். [மிறைக்கவி - சித்திரகவி]

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

இந்தக் குறளில் உள்ள அனைத்து சீர்களும் மேலுள்ள வெண்பாவில் மறைந்திருக்கிறது.

கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!

இந்தக்  கரந்துறை வெண்பாவில்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!

என்ற குறட்பா மறைந்துள்ளது.

குறட்பா ஒன்று மறைந்திருக்கும் வண்ணம் கரந்துறை நேரிசை வெண்பா  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.04.2017

சித்திரை [பகுதி - 1]

சித்திரைக் கவியரங்கம்
 
சித்திரைப் பெண்ணே! சித்திரைப் பெண்ணே!
சிந்தை புகுந்தவளே!
முத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க
மோகம் புரிந்தவளே!
 
இத்தரை மீதில் என்றமிழ் மக்கள்
என்று இணைவாரோ?
நித்திரை நீங்கி நீள்புகழ் காண
நின்று உழைப்பாரோ?
 
எத்தடை வந்தும் எம்படை வெல்ல
ஏற்றங் கொடுப்பாயே!
அத்திரை கடலாய் அவ்விரி வானாய்
ஆற்றல் அளிப்பாயே!
 
நாட்டைச் சுரண்டும் நரிகளை நாங்கள்
நம்பி இருந்தோமே!
வீட்டை இழந்தும் விதியை நினைந்தும்
வெம்பித் துடித்தோமே!
 
கோட்டை புகுந்தார் கொள்ளை அடித்தார்
கொள்கை துறந்தாரே!
வேட்டை புரிந்த வெறிப்புலி போன்றே
நாட்டை அழித்தாரே!
 
தாய்மொழிப் பற்றைத் தம்மினப் பற்றைத்
தமிழர் இழந்தாரே!
வாய்மொழி யாவும் காய்மொழி யாகி
வரண்டு விழுந்தாரே!
 
உழவரின் வாழ்வு உறுதுயர் நீங்க
உள்ளம் தரித்திடுவாய்!
அழகுடன் காவிரி அணையைத் திறந்து
அல்லல் அகற்றிவாய்!
 
அடிதடிக் குண்டர் ஆட்சியில் ஏறி
ஆடிக் களிக்கின்றார்!
கொடுநரிக் கூட்டர் கொழுப்பிங் கேறிக்
குவிந்து கிடக்கின்றார்!
 
வாக்கிடும் வேலை வந்துறும் காசு
வாழ்வைச் சிதைத்திடுமே!
தாக்கிடும் பகைமுன் தாழ்ந்திடும் நிலையேன்
சால்பைப் புதைத்திடுமே!
 
காலைப் பிடிப்பார்! கயவரைத் தொழுவார்!
காறி உமிழ்ந்திடுவாய்!
மாலைகள் ஏற்க மந்தையாய் நிற்கும்
மடமை எரித்திடுவாய்!
 
காவி அணிந்தே காதல் புரிந்தே
கடவுள் எனச்சொல்வார்!
கூவி அழைத்தே கூடிக் களித்தே
கொலைகள் புரிந்திடுவார்!
 
சாதியின் பிரிவைச் சாத்திரப் பிரிவைத்
தமிழர் தலைக்கொண்டார்!
சோதியின் நெறியைத் துாயவர் வழியைச்
சூடப் பயங்கொண்டார்!
 
மண்ணிதில் மூத்த மாண்புடைத் தமிழர்
மரபை மறப்பதுவோ?
புண்ணதில் புரளும் புழுவெனத் தமிழர்
புழுத்து இழிவதுவோ?
 
செம்மொழித் தாயின் திண்மையைச் செப்பிச்
சீரைப் புகட்டுகவே!
வெம்பழிப் போக்கை வீண்ணுறும் வாழ்வை
வெட்டி விரட்டுகவே!
 
அன்பொளிர் வண்ணம் அறமொளிர் வண்ணம்
அழகை அணிந்திடுவாய்!
இன்பொளிர் வண்ணம்! இசையொளிர் வண்ணம்
ஏற்றம் அளித்திடுவாய்!
 
பண்ணறிவு ஏந்திப் பாடிய பாட்டைப்
பாரில் முழங்கிடுவாய்!
நுண்ணறிவு ஏந்தித் தண்டமிழ் மக்கள்
மின்னப் புகழ்தருவாய்!

இன்னும் வளரும்.....
 
பாட்டின் இலக்கணம்
 
சந்த மாத்திரையில் கணக்கிட்டு எழுதிய இசைப்பாடல்.
 
5+4+5+4+5+7 என்ற சந்த மாத்திரையை ஒவ்வொரு அடியும் பெற்றுள்ளது. ஈரடி ஒரு கண்ணியாகும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். ஈரடியும் இயைபு பெறவேண்டும்.
சீரின் ஈற்றில் உள்ள குறில் 2 மாத்திரையைப் பெறுவதும் உண்டு.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.04.2017

lundi 10 avril 2017

கையறுநிலை

முனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை
 
ஏனோ பிரிந்தனையோ? இங்குப் பிறந்ததும்
வீணோ எனமனம் வெந்தனையோ? - வானோரும்
அந்தமிழை நாடினரோ? அ.அறிவு நம்பியே!

எந்தமுளம் தேடுமுனை இங்கு!
 
ஆழ்ந்த உரையெங்கே? அன்பு மனமேங்கே?
சூழ்ந்த புகழெங்கே? துாய்மையுடன் - வாழ்ந்தவுன்
ஆற்றலறம் எங்கே? அருமறிவு நம்பியே!
கூற்றுவனைக் கொண்டதேன் கூறு
 
கம்பன் கவியாய்ந்தாய்! கன்னல் குறளாய்ந்தாய்!
இம்மண் உவக்க எழுத்தீந்தாய்! - நம்மொழி
ஆள அகங்கொண்டாய்! அ.அறிவு நம்பியே!
மீளாப் பிரிவேன் விரைந்து?
 
இளங்கோ இசையுணர்ந்[து] ஈந்த அரும்நுால்
வளங்கோ வகுத்தவழி வார்க்கும்! - விளக்கமினி
யாரிடம் யாம்பெறுவோம்? அ.அறிவு நம்பியே!
ஓரிடம் உன்னிணை ஓது?
 
எழுத இதழூண்டாம்! ஏற்றபணி யுண்டாம்!
தொழுத கலையுண்டாம்! தொன்மை - மொழிண்டாம்!
எல்லாம் உனைத்தேட, இன்னறிவு நம்பியே!
சொல்லாமல் சென்றாய் துணிந்து!

 
ஆழ்ந்த துயருடன்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]


மலைமகளே!
வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]
 
1.
அன்னை உன்னடி
என்னைக் காத்திடும்!
முன்னைப் புண்வினை
தன்னை நீக்கிடும்!
 
2.
மஞ்சள் ஆடையில்
நெஞ்சம் சொக்கிடும்!
கொஞ்சும் புன்னகை
தஞ்சம் நல்கிடும்!
 
3.
செம்மை ஆடையே
வெம்மை போக்கிடும்!
அம்மை பார்வையே
எம்மை தாங்கிடும்!
 
4.
பொன்சேர் ஆடையும்
மின்சேர் மாலையும்
என்சேர் வாழ்வினை
இன்சேர் ஆக்கிடும்!
 
5.
பச்சை ஆடையோ
இச்சை ஈந்திடும்!
பொச்சை என்மனம்
பிச்சை ஏந்திடும்!
 
6.
வஞ்சி மேவிடும்
பஞ்சி ஆடையின்
விஞ்சும் பேரெழில்
நெஞ்சுள் நின்றிடும்!
 
7.
சக்தி உன்னுரு
பக்தி ஊட்டிடும்!
புத்தி கூட்டிடும்!
முத்தி காட்டிடும்!
 
8.
தேவி உன்முகம்
ஆவி ஆழ்ந்திடும்!
காவி ஞானியர்
மேவிக் கூத்திடும்!
 
9.
மண்ணும் உன்னருள்!
விண்ணும் உன்னருள்!
தண்ணும் உன்னருள்!
பண்ணும் உன்னருள்!
 
10.
பாடிச் சாற்றினேன்!
ஆடிப் போற்றினேன்!
தேடி நன்மலர்
கோடி சூட்டினேன்!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.04.2017