vendredi 31 août 2012

பாட்டுக்கோர் புலவன் பாரதி





கண்களிலே கனல்பிழம்பு
கருத்தினிலே கூரீட்டி
கொண்டுநடை போட்டவனும் யாரு? – அவன்
பண்டுபுகழ்ப் பாரதிஎன் றோது!

முண்டாசுப் பாகையுடன்
தொண்டாற்றி வாழ்ந்தவனைக்
கொண்டாடிப் போற்றும்என் நெஞ்சம்! - அவனுள்
ஒன்றாகித் தமிழ்மகளைக் கொஞ்சும்!

நெஞ்சினிலே உரமேற,
கொஞ்சுதமிழச் சீா்பாட
அஞ்சாமல் கவிபடைத்த புலவன்! - வாழ்வில்
துஞ்சாமல் பகைஎதிர்த்த தலைவன்!

பாட்டினிலே போர்தொடுத்துப்
பகைவர்களை ஓட்டியவன்,
தீட்டிவைத்த கவியாவும் முத்து!- அன்னை
தீந்தமிழாள் நமக்களித்த சொத்து!

சாதிமத சழக்குகளை
மோதியிங்கு அழித்திட்ட
நீதிநெறிப் பெரும்புலவன் பாட்டு - அது
சோதிதரும் வாழ்வினிலே மீட்டு!

வீட்டுக்குள் பாவையரைப்
பூட்டுவதும் சரிதானோ?
வேட்டுவைத்து முழங்கிய,பா மன்னன்!- அவன்
தீட்டிவைத்த கவி,காப்பான் கண்ணன்!

தேமதுரத் தமிழோசை
தேசமெலாம் பரவிடவே
நாமுழைக்க வேண்டுமெனச் சொல்லி- வைத்தான்
நமையழிக்கும் நரிகளுக்குக் கொள்ளி!

பைந்தமிழின் தேரோட்டி,
பாமரரின் மதிதீட்டி,
தந்தமொழி வீரத்தை ஊட்டும்!- பாட்டின்
சந்தநடை தமிழழகைக் காட்டும்!

கள்கொடுக்கும் போதையினைக்
கண்ணாம்மா கவிகொடுக்கத்
துள்ளிமனம் ஆடுகிறேன் நானே!- தூய
காதலிலே முழுகிநனைந் தேனே!

பெற்றதிரு நாட்டினையும்
உற்றதமிழ் மொழியினையும்
பொற்புடைய தாய்என்று பாடிசொன்னான்
புத்துலகச் சிந்தனையைச் சூடி

jeudi 30 août 2012

சம்..போ(டு) இராமாநு சம்!






வீரத்தில் வாய்கிழியும்! விஞ்சும் பெரும்தொந்திப்
பாரத்தில் மண்கிழியும்! சாப்பாட்டு - நேரத்தில்
உம்மோடு சண்டையேன்? நம்கையில் ஓர்ரசம்,கி
சம்..போ(டு) இராமாநு சம்!

நடமிடாப் பூச்சிகள்! நற்றம் தொலையும்!
கடமுடா என்று கழுவும்! - கடைத்தோப்பில்
சொம்போடு நான்..குந்த! இன்னும் மிளகு,
சம்..போ(டு) இராமாநு சம்!

திருமால் அடியார் திருமணம் என்றால்
ஒருநாள் சிறுவயிற்றுக் கோய்வு - பெரும்பசி 
எம்மோ(டு) இருந்தகள இன்னோர் முறை,பாய
சம்..போ(டு) இராமாநு சம்!

சுண்டல் புளியோதரை சூப்பர்! இனிக்கின்ற
வெண்பொங்கல் வானமுதை விஞ்சுமே! - உண்டுவக்க
நம்மோ(டு) அவர்வருவார்! நன்றே குழம்பில்,வா
சம்..போ(டு) இராமாநு சம்!

கட்டைத் துறவிகள் கொட்டமிடும் காட்சிகளை,
அட்டைத் தலைவர்தம் புண்ணகத்தை - மொட்டையடி
கும்,ஊரு கொன்னரியைத் தோலுறித்துக் காட்ட..வே
சம்..போ(டு) இராமாநு சம்!

ஆடுடா ஆடு!கோல் தாண்டிக் கரணங்கள்
போடுடா போடு! புகழேந்திப் - பாடுடா
சம்போ சிவமென்று! தாழ்ந்து வணக்கம்..கொஞ்
சம்..போ(டு) இராமாநு சம்!

அயன்மண்ணில் வந்தேறி அல்லும் பகலும்
புயற்கண்ணில் ஆட்பட்ட போதும் - வயற்றன்னில்
கம்போடு போராடிக் கையோங்கும்! கூழின்..மிச்
சம்,போ(டு) இராமாநு சம்!

இன்றுபோய் நாளை..வா என்றவன்! புல்லர்களை
வென்று..போய் நன்மை விளைத்தவன்! - அன்பேந்தி
அம்போடு வந்தகதை! ஆழ்ந்ததை நீ..கேட்(டு)..உச்
சம்..போ(டு) இராமாநு சம்!

போண்டா! மெதுவடை! பட்சி!பூ போல்வர
வேண்டா மனமும் விரும்பிடும்! - மாண்புடன்
நம்பே(ரு) உரைத்திடும்! நற்சோடா உப்பில்..வீ
சம்..போ(டு) இராமாநு சம்!

மாத வருவாய் குறைந்ததென உள்நொந்து
வேத நெறியை வெறுக்காதே! - மோதுகின்ற
வம்போடு பார்க்காதே! மாயனுக்கு மல்லியில்..மஞ்
சம்..போ(டு) இராமாநு சம்!

mercredi 29 août 2012

தமிழா விழித்திடு! தமிழைக் காத்திடு



எடுப்பு

வீரத் தமிழா விழித்திடுஉன்
விழியாம் தமிழைக் விரைந்த நீ காத்திடு!
                                                                                            (வீரத் தமிழா)

தொடுப்பு

சீரெனும் செந்தமிழ் செம்மொழியாம் - அதைத்
தேனென உண்டே சிறந்து நீ வாழ்ந்திடு!
                                                                                            (வீரத் தமிழா)

முடிப்புகள்

இனிதாகும் தமிழ்தன்னைப் போற்றுநமை
எதிர்ப்போரை முன்னின்று எந்நாளும் தூற்று!
கனிபோலும் தமிழினிக்கும் ஊற்றுஅதன்
காதல்மேல் வீசட்டும் கற்கண்டாம் காற்று!
                                                                                            (வீரத் தமிழா)

கலைபல கண்டவர் தமிழரென்றோதொல்
காப்பியம் கொண்டவர் தமிழரென்றோ!
சிலம்பினைப் பெற்றவர் தமிழரென்றோதிருக்
குறளினைச் கற்றவர் தமிழரென்றோ!
                                                                                            (வீரத் தமிழா)

கற்பனைக் கடலெனும் கம்பனையேபுவி
கண்டிடச் செய்ததும் களிதமிழே!
அற்புத அருட்சுடர் வள்ளலையேஇங்கு
அகமகிழ்ந்(து) அளித்ததும் அருந்தமிழே!
                                                                                            (வீரத் தமிழா)

mardi 28 août 2012

காதல் பெருகுதடி



காதல் பெருகுதடி!
கம்பன் கவியழகில் - தமிழ்க்
                                                            (காதல்)

நாதன் வில்லழகில்
நறுந்தேன் சொல்லழகில் - உயிர்க்
                                                            (காதல்)

மோதல் விழியழகில்
மோக மொழியழகில் - உயர்
                                                            (காதல்)

ஈதல் கொடையழகில்
சீதை நடையழகில் - வளர்
                                                            (காதல்)

ஒவ்வொரு நாளும் அவன்கவிதைஎன்
உயிரினில் ஊட்டும் தமிழமுதை!
எவ்வகை இன்பம் தரும்உவமை - இன்ப
ஈடிலாத் தமிழின் தனிப்பெருமை!
                                                            (காதல்)

என்மன வீட்டில் குடிபுகுந்தான் - சந்த
இன்கவி எழுதப் படியளந்தான்!
நன்மன இராமன் எழில்புனைந்தான் - கம்பன்
பொன்மழை பொழிந்து புகழடைந்தான்
                                                            (காதல்)

அண்ணலும் அவளும் நோக்கியதால் - காதல்
மின்னலும் வந்து தாக்கியதால்
எண்ணிட ஏக்கம் ஊக்கியதால் - ஈருயிர்
ஒன்றிட இன்பம் தேக்கியதால்
                                                            (காதல்)

lundi 27 août 2012

வேண்டும் வரம்



பிறக்கும் பிறவிதொறும் பீடார் தமிழில்
சிறக்கும் கவியாய்ச் செழிக்கப் - பறக்கும்
குயிலெனக் கூவிமென் னெஞ்சம்! கவிதை
வயலென வேண்டும் வரம்!

நலமுற வேண்டும் நலிவுறும் மக்கள்!
பலமுற வேண்டும்நற் பண்பே! - உலகை
வளம்வர வேண்டும் மனிதம்!சன் மார்க்கம்
வளமுற வேண்டும் வரம்!

அருங்கம்பன் போலிங்(கு) அணித்தமிழ் பாடிப்
பெருங்கம்பன் நானெனும்பேர் பெற்று! - வருமுலகில்
நின்றிட வேண்டும்! நிலைத்த நெடும்புகழை
வென்றிட வேண்டும் வரம்!

சங்கத் தமிழ்மணக்கச்! சந்தக் கவிமணக்கத்!
தங்கத் தமிழ்மணக்கச்! சீர்மணக்கப்! - பொங்குதமிழ்
எண்ணமுற! எத்திசையும் ஏந்தித் தமிழ்மணக்க
வண்ணமுற வேண்டும் வரம்!

சாதி சமய சழக்குகளை வேரறுக்க!
நீதி நிலவும் நிலங்காணச் - சோதியெளிர்
உள்ளமே! சன்மார்க்க இல்லமே! பொன்வடலூர்
வள்ளலே! வேண்டும் வரம்!

பாட்டுக்கோர் பாரதிபோல் பாங்குடைப் பாரீசு
நாட்டுக்கோர் நற்கவியாய் நானிருக்கக் - கூட்டமாய்
ஆட்டமிடும் தீயவரை அப்படியே தூளாக்க
வேட்டிட வேண்டும் வரம்!

தந்தை பெரியார்போல் தன்மான சீரூட்ட!
கந்தைச் சமுகக் கரையகற்றச்! - சந்தையுறும்
மந்தையெனும் வாழ்வகற்ற! வண்ண மதியொளிர
விந்தையென வேண்டும் வரம்!

என்னாடு! எனதில்லம்! ஏனோ தமிழில்லை!
பொன்னாடு! பொய்யாகப் போற்றுகிறோம்! - நன்மைகள்
தந்தாட வேண்டுமெனில் தண்டமிழ் அரசேறி
வந்தாட வேண்டும் வரம்!

நாளை உலகம் நறுமலர்ப் பூத்தாடும்
சோலை உலகம் எனச்சுடர்ந்து - கோலமெலாம்
சூழ்ந்திட வேண்டும்! இனிமை சுரந்தென்றும்
வாழ்ந்திட வேண்டும் வரம்!

சுந்தரியே! என்கவிதைச் சொர்க்கமே! என்வாழ்வின் 
மந்திரியே! மாய விழிமலரே! - சந்தமெலாம்
தந்தணைக்கத் தூண்டும் தளிர்க்கொடியே! எப்பிறப்பும்
வந்தணைக்க வேண்டும் வரம்!