mardi 30 juillet 2013

என்னுயிர்த் தாயே!




என்னுயிர்த் தாயே!
[குறள் வெண்பா]

1.
அன்னைத் தமிழே! அடியேனின் நாப்படகில்
உன்னைச் சுமப்பேன் உவந்து!

2.
கன்னல் தமிழே! கடையனென் நாச்செருப்பை
உன்றன் அடிக்கே உடுத்து!

3.
வண்ணத் தமிழே! வளமாய்என் நாமீதும்
எண்ணம் இனிக்க இரு!

4.
கொஞ்சும் தமிழே! குழந்தையென் நாமலரில்
நெஞ்சம் நிறைந்து நெகிழ்!

5.
இன்பத் தமிழே! எளியேனின் நாஅமர்ந்து
துன்பம் அனைத்தும் துடை!

6.
கோலத் தமிழே! குளறுமென் நா..திருத்திக்
காலப் புகழைக் கணி!

7.
சந்தத் தமிழே! சருகனென் நா..தழைக்க
வந்து தருவாய் வளம்!

8.
மின்னும் தமிழே! விரியிலை நாஎழுத்தைத்
தின்னும் சுவையாய்த் திரட்டு!

9.
சங்கத் தமிழே! தளிர்தாழை நாவணிந்து
பொங்கும் கருத்தைப் பொழி!

10.
தங்கத் தமிழே! தவறின்றி நா..பயிலத்
தங்கி இருந்தெனைத் தாங்கு

lundi 29 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 110]




காதல் ஆயிரம் [பகுதி - 110]


931.
செங்கரும்பே! செந்தேனே! சிந்தை சிலிர்க்குதடி!
சங்கழகே! தண்மலரே! சந்தமிடும் - தங்கமே!
ஊடல் ஒழித்தே உருகுமென் உள்ளத்துள்
கூடல் கொடுப்பாய் குளிர்ந்து!

932.
சின்ன குழந்தைபோல் என்முன் சிரிக்கின்றாள்!
என்ன அழகவள்? ஏங்குகிறேன்! - கன்னம்
கவிபிறக்கும் காதல் களஞ்சியம்! அங்கே
குவிந்திருக்கும் இன்பம் குழைந்து!

933.
கொய்யாப் பழச்சாறே! கோதையே! உன்னழகில்
நெய்யாய் உருகுதடி என்னெஞ்சம்! - மெய்முழுதும்
சூடேறும்! பின்னே குளிரேறும்! சூதறியேன்!
ஏடேறும் இன்தேன் எழுத்து!

934.
தேனலையில் நீந்தித் திளைக்கின்றேன்! இன்பமுடன்
வானலையில் நீந்தி வருகின்றேன்! - மானழகுப்
பார்வை படைப்பவளே! பாவலனை வென்றிடவோ
கார்..மை எழுதும் கணக்கு!

935.
என்னையே எண்ணி இருக்கின்றாய்! என்னவளே
உன்னையே எண்ணி உருகுகிறேன்! - முன்னையே
போட்ட முடிச்சென்பேன்! நம்முறவு பூத்தொளிரும்
தோட்ட அழகென்பேன் தோய்ந்து!

(தொடரும்)

முதலாய்.... முடிவாய்....



முதலாய் முடிவாய் இருப்பவனே!

உன்னை யன்றி எனக்குதவ
            உலகில் ஒருவன் இனியுண்டோ?
முன்னைச் செய்த வினைகளினால்
            முடியாத் துயரில் உழல்கின்றேன்!
பொன்னை நிகர்த்த மேனியனே!
            புல்லாங் குழலை இசைப்பவனே!
கண்ணைக் காக்கும் இமைபோலக்
            கண்ணா என்னைக் காப்பாயே!

படியா திருந்த நெஞ்சத்தைப்
            படியச் செய்யும் பரம்பொருளே!
அடியேன் வாழ்வில் கரையேறும்
            ஆற்றல் இன்றித் தவிக்கின்றேன்!
படியாய்க் கிடந்துன் கோயிலிலே
            பாவி யானும் கெஞ்சுகிறேன்!
முடியா தொன்றும் உனக்கில்லை
            முதலாய் முடிவாய் இருப்பவனே!

29.10.2000

dimanche 28 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 109]




காதல் ஆயிரம் [பகுதி - 109]
 
926.
பேருந்தில் என்னெதிரே பெண்ணழகே நீயமர்ந்தால்
பேருந்து பேரின்ப உந்தாகும்! - ஓருந்தும்
என்முன் தெரியா(து) இனியதமிழ்த் தேவதையே
உன்முன் கிடக்கும் உயிர்!

927.
தேர்விழா காணக் கிளம்புகிறோம்! தேவியே
ஓர்விழா உன்னிணை ஆகிடுமோ? - பார்த்துச்
சிறுபெட்டி வண்டியிலே சேர்ந்தமர்ந்தோம்! காதல்
நறும்பெட்டி நல்கும் நமக்கு!

928.
கப்பல் பயணமா? காதல் பயணமா?
செப்பல் எளிதோ? சிலிர்க்குதடி! - முப்பொழுதும்
அந்த நினைவுகள் ஆர்த்தெழுந்து பொங்குதடி!
வந்து கொடுப்பாய் வரம்!

929.
கூர்வான ஊர்தியிலே கூடிக் குலவியது
தேர்வான இன்பத் திரட்டென்பேன்! - தேர்..வானில்
செல்லும் அழகென்பேன்! தேவதையே உன்னழகு
வெல்லும் அழகென்பேன் வீழ்ந்து!

930.
குதிரைத் தேரேறிக் கொள்ளை எழிலாய்
மதுரை அழகி..நீ வந்தாய்! - மதுமரைக்
காட்டின் மணங்கண்டேன்! உன்கண்ணில் நானெழுதும்
பாட்டின் மணங்கண்டேன் பாய்ந்து!

(தொடரும்)

samedi 27 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 108]





காதல் ஆயிரம் [பகுதி - 108]


921.
மிதிவண்டி செல்லுதடி! மென்மலர்க்கை பட்டு
மதிவண்டி செல்லுதடி! மானே! - புதிய
உலகத்தைக் கண்டேன்! உணர்வேறி என்னுள்
பல..வித்தை கண்டேன் பறந்து!

922.
தொடர்வண்டி நல்லசைவில் தூயவளைத் தொட்டே
இடர்இன்றி இன்பம் இசைத்தேன்! - படர்கின்ற
எண்ணங்கள் காட்டும் எழிற்சொர்க்கம்! பொன்விழி
வண்ணங்கள் காட்டும் வரைந்து!

923.
இருமாட்டு வண்டியை நானோட்ட, பின்னே
அரும்பாட்டு பாடி அணைத்தாள்! - வரும்காட்டுப்
பாதை உரைத்தாள்! பருவமொளிர் பார்வையிலே
போதை கொடுத்தாள் புணர்ந்து!

924.
துள்ளுந்து! காதல் சுகவுந்து! பொன்னுலா
செல்லுந்து! காதல் சிறப்புந்து! - வெல்லுகிற
சொல்லுந்து போன்றே சுவையுந்து! தேனிலவை
உள்ளுந்தும் ஆசை உணர்வு!

925.
மல்லையைக் காண மகிழுந்தில் நாம்சென்றோம்!
எல்லையை எட்டும்முன் அங்கொரு - கொல்லையில்
நீராடி இன்புற்றோம்! நெஞ்ச நினைவுகளைச்
சீராடி இன்புற்றோம் சேர்ந்து!

(தொடரும்)

vendredi 26 juillet 2013

சுப்புத் தாத்தா

 இசைவாணா் சுப்புத் தாத்தாவின் குரலிசை



பாவாணன் பாரதி தாசன் தமிழ்க்கவிக்கு 
நாவாணா் நற்சுப்புத் தாத்தாவின் - மா..வானப்
பண்மழை! இன்பப் படா்மழை! இன்னிசையால்
கண்மழை மேவும் கனிந்து!



மயிலேறி வருவான்




மயிலேறி வருவான்

எடுப்பு

அழகிய மயிலேறி வருவான் - நல்
ஆற்றலை நமக்கென்றும் தருவான்... முருகன்
                                     (அழகிய)
தொடுப்பு

பழமுதிர் சோலையிலே திரிவான் - அவனைப்
பாடினால் நல்லருளே புரிவான்... முருகன்
                                     (அழகிய)
முடிப்பு

திருப்பரங் குன்றமும் அவன்வீடு
திருச்செந்தூர் சீரொளிர் பாக்காடு!
திருத்தணி புகழினைத் தினம்பாடு!
திருவாவி னன்குடி தனைநாடு... முருகன்
                                     (அழகிய)

திருவேட்கா(டு) அதனிலே தினமிருப்பான்
தெய்வானை வள்ளியொ(டு) அவன்களிப்பான்
குருவாக நின்றருள் நமக்களிப்பான்
குன்றாத செந்தமிழ் இசைகொடுப்பான்... முருகன்
                                     (அழகிய)

17.06.1985

jeudi 25 juillet 2013

பருவம் மின்னிடும் பாவை



பருவம் மின்னிடும் பாவை

பருவம் மின்னிடும் பாவையின் பேரெழில்
            பாய்ச்சிடும் மின்சாரம்!
உருவம் குன்றிட உள்ளுயிர் வாடிட
            ஓங்குது சுகபாரம்!
பெருகும் காதலால் பேசிடும் கிளிகள்
            பிணையுது வயல்ஓரம்!
அறுகம் புல்லென ஆசைகள் படருதே
            அவள்மனை வெகுதூரம்!

என்ன சொல்வதோ? எப்படிப் சொல்வதோ?
            இனியவள் மனஞ்சேர!
வண்ணம் பற்பல! எண்ணம் பற்பல!
            என்னவள் எழில்பாட!
கன்னல் முற்றிய கனிகளைப் பூங்குயில்
            கடித்திடச் சுவையேற!
பின்னல் கூந்தலில் என்னையும் பின்னுவாள்
            எங்கினி நான்ஓட!

ஏற்றம் ஏறிய இளையவன் இசைமழை
            ஏந்திடும் பொற்சந்தம்!
ஆற்றின் வெள்ளமாய் அன்னவள் அகத்தினில்
            அரித்திட வளம்சிந்தும்!
காற்றில் நீந்திடும் கவிஞனைக் கவிதையால்
            கட்டிய கலைப்பெண்ணே!
சாற்றிப் போற்றிய தமிழ்மொழி அமுதினைத்
            தந்திட வா..முன்னே!

சோலை பூத்திடும் சூரிய மலர்களில்
            சுந்தர முகம்மின்னும்!
ஆலை நெய்திடும் ஆடையைப் போலவே
            அவள்விழி எனைப்பின்னும்!
மாலை சாய்திட மன்மதன் வந்திட
            மல்லிகை மணம்வீசும்!
சேலை ஓய்ந்திடச்  செங்கனி சுவைதரச்
            சேர்ந்தவர் உயிர்பேசும்!

04.03.2010

mercredi 24 juillet 2013

வள்ளலார் காட்டும் வழி!




வள்ளலார் காட்டும் வழி!

உருப்படா மானிடரே ஒன்று கேளீர்
     ஓரூரில் பலகோவில் கட்டி வைத்தீர்!
ஒருகடவுள் உலகத்தில் இருத்தல் உண்மை
     உருவாக்கல் உருவழித்தல் அவனின் தம்மை!
பொருளையெலாம் வீணாகச் செலவ ழித்தால்
     புவியினிலே எவருக்கும் இல்லை நன்மை!
உருவாகும் எதிர்காலம் ஓங்க வேண்டின்
     உயர்சோதி வடலூரார் வழியை ஏற்பீர்!
              
கன்றுக்குத் தாய்மடியைத் காட்டி யே,பால்
     கறந்துவிடும் நம்மினந்தான் திருந்தப் போமோ?
ஒன்றுக்கும் உதவாத கதைகள் பேசி
     ஊரினையே பலபிரிவாய்ப் பிரித்தல் நன்றோ?
ஒன்றாகும் கடவுளென உணர்ந்து சொன்ன
     ஒழுக்கத்தின் சீலர்நம் வடலூர் வள்ளல்!
நன்றாகும் அருட்பெருஞ் சோதி கொள்ளை
     நாட்டோர்கள் பெறுவாரேல் ஏது தொல்லை!

பலன்காண உயிர்ப்பலியைச் செய்ய வேண்டாம்!
     பாமரரைத் தனியாக ஒதுக்க வேண்டாம்!
நிலங்கண்ட மழையினது தன்மை போன்று
     நீடுபுகழ்ச் சன்மார்க்க நெறிகள் பேணீர்!
புலங்கொழிக்கும் பொதுநோக்கும் புவியில் மேவப்
     புத்தமிழ்தாம் அறநெறிகள் வாழ்வில் சூழ
நலங்கொடுக்கும் அருட்பெருஞ் சோதி ஒன்றே
     நாட்டினிலே தனிப்பெருங் கருணை யாமே!

அருட்சோதி ஆண்டவனைப் போற்றிப் போற்றி
     அன்புதனைப் பல்லுயிர்பால் தூண்டி வைத்தார்!
மருட்சார்பு தீர்ந்திடவே வாழ்வில் என்றும்
     வள்ளலவர் அருளாட்சி வேண்டும் மென்றார்!
பொருள்சேரப் புகழ்சூழ் எவ்வு  யிர்க்கும்
     பொதுமைநிலை சன்மார்க்கம் வேண்டி நின்றார்!
இருள்நீக்கும் மாமருந்தாம் ஈடில் லாத
     இன்பவொளி அருட்சுடரை ஏற்றி னாரே!

ஒருமையுடன் இறைவனடி போற்ற வேண்டும்!
     உவகையுடன் அவனருளை வேண்ட வேண்டும்!
பெருமைபெறும் அவன்புகழைப் பேச வேண்டும்!
     பிறவாத பெருநிலையைப் பெறுதல் வேண்டும்!
அருமையுடன் அவனருளாம் சோதி தன்னில்
     அனைவருமே முழ்கிநனி யுயர்தல் வேண்டும்!
கருணைமிகும் வாழ்வொன்றே வேண்டும் என்ற
     கமழ்கின்ற வழிசொன்ன வள்ளல் வாழ்க! 

30.01.1985