dimanche 20 juillet 2014

கவிமணி ச. விசயரத்தினம்



கவிமணி ச. விசயரத்தினம் இராசலட்சுமி இணையரின்
நல்லற வாழ்த்து மலர்

இன்ராச லட்சுமியும் நன்விசய ரத்தினமும்
பொன்னாரம் போன்று பொலிந்தவர்கள்! - என்றென்றும்
வாழ வழிகாட்டும் மக்களைத் தந்தவர்கள்!
தாழப் பணிந்தேன் தலை!

கன்னித் தமிழ்பாடும் கன்னல் கவிமணியார்
சென்னி தரித்தார் செழுந்தமிழை! - பன்னீர்போல்
உள்ளம் மணக்கும் உயர்விசய ரத்தினனார்
அள்ளும் தமிழின் அமுது!

முன்னோர் மொழிந்த நெறியேற்றும்
     முல்லைக் காடாய் வழியேற்றும்
தன்னேர் இல்லாத் தண்டமிழின்
     தலைமை மகனாய்ப் புகழேற்றும்
பொன்னேர் பூட்டி உழுதிட்ட
     புவிபோல் பொங்கும் வளமேற்றும்
இன்தேன் விசய ரத்தினனார்
     ஏந்தல் வாழ்க பல்லாண்டே!

செம்மைக் கம்பன் கழகத்தின்
     சிறப்புத் தலைவர் பணியாற்றி,
அம்மை அப்பன் திருவடியை
     அகத்துள் பதித்துத் தினம்போற்றி,
இம்மை மறுமைச் சீரோங்க
     எழிலார் உரைகள் பலவாற்றி,
செம்மல் விசய ரத்தினனார்
     செழித்து வாழ்க பல்லாண்டே!

கொடுத்த நூல்கள் அத்தனையும்
     கொஞ்சும் தமிழின் சுவைகூறும்!
தொடுத்த கேள்வி விடையாவும்
     கூர்த்த மதியின் நலம்பாடும்!
எடுத்த செயல்கள் இவ்வுலகில்
     என்றும் ஒளிரும் புகழ்சூடும்!
நெடும்சீர் விசய ரத்தினனார்
     நீடு வாழ்க பல்லாண்டே!

அய்யன் வீரன் மணிக்கண்டன்
     அழகில் காதல் பூண்டிடுவார்!
நெய்யின் வாசம் வீசுகிற
     நேசக் கதைகள் தீட்டிடுவார்!
மெய்யும் உயிரும் சேர்வனபோல்
     மேன்மை யாவும் இணைந்தனவே!
உய்யும் விசய ரத்தினனார்
     உவந்து வாழ்க பல்லாண்டே!

பேரார் குடியைப், பெருங்கூத்தன்
     பேணிக் காத்தே அருள்செய்ய!
ஊரார் உறவை, நல்லுமையாள்
     உலகார் வண்ணம் ஒளியேற்ற!
பாரார் தமிழைச் பரப்பிடவே
     பரமன் தொண்டர் வழிகாட்ட!
சீரார் விசய ரத்தினனார்
     சீர்த்தி வாழ்க பல்லாண்டே!

18.07.2014

10 commentaires:

  1. தங்களது வாழ்த்துக்களுடன்
    எனது வாழ்த்துக்களும்
    தம 4

    RépondreSupprimer
  2. இணையர்களுக்கு
    எனது நல்லற வாழ்த்துகள்

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா.
    வாழ்த்துமலர் பாமாலை கண்டு உவகை கொண்டேன்
    சொற்சிறப்பும் பொருள்சிறப்பும் குவியக்கண்டேன்
    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. இணையர் விசயரத்தினம் இராசலட்சுமி அவர்களுக்கு
    நல்கிய இனிய வாழ்த்து மலர் கண்டேன்.

    மிக மிக அருமை ஐயா!

    இணையருக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. அருமையான பாவாக்கம் ஐயா...

    RépondreSupprimer
  6. வாழ்த்துப்பா மிக அருமை ஐயா!

    நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. ஐயா தங்களின் வலைப்பூவை முதலில் பார்க்கின்றேன். மரபுக் கவிதைகளின் அணிவகுப்பு அருமை ஐயா. தொடர்கின்றேன்.
    வலைப்பூ முழுவதும் வண்ணமிகு வெண்பா
    சிலையெனச் செய்த கவிஞர் - கலைஞர்
    எனும்சொல்லும் மேலாமோ இன்தமிழ்ச் செம்மல்
    எனும்அடையே முற்றும் சரி.

    RépondreSupprimer
  8. நானும் தங்களோடு,சேர்ந்து வாழத்துகிறேன்!

    RépondreSupprimer

  9. கன்னல் மனத்தர் கவிமணியார் வாழ்கவே
    மின்னல் தமிழாய் விரிந்துலகில்! - அன்னார்
    புகழுரைக்கப் பொங்கும் இனிமையினை என்றன்
    அகம்நிறைக்கப் பொங்கும் அறிவு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அய்யா அரும்விசய ரத்தினனார் சீருரைத்து
      நெய்யாய் மணக்கிறது நின்தமிழே! - கொய்யாப்
      பழமாகப் பாக்கள் படைத்ததமிழ்ச் செல்வா!
      உழவுக்குத் தந்தாய் உரம்!

      Supprimer