mercredi 26 novembre 2014

மாவீரர்



மாவீரா்

1.
மாவீரர் தம்மை மனமெண்ணச் சொல்லெல்லாம்
பாவீரம் சூடிப் படைநடத்தும்! - வா..வீரர்
சோதியைக் கையேந்தி! தோழா! பகைக்கூட்டம்
பேதியைக் காணும் பிரண்டு!

2.
நாட்டின் விடுதலையை மூட்டிய மாவீரர்!
ஈட்டியின் கூர்மையை ஏந்தியவர்! - காட்டினில்
அஞ்சா திருக்கும் அரிமா அதிர்ந்தோடும்!
பஞ்சாய்ப் பறக்கும் பகை!

3.
தன்மானம் குன்றித் தமிழன் கிடப்பதுவோ?
பொன்வானக் கீற்றாய்ப் புறப்பட்டார்! - நன்மான
மாவீரர்! வானதிரும் வன்மை நடைகண்டு
நாவீரர் போனார் நசிந்து!

4.
பாயும் கொடியேந்தித் தாயின் நிலங்காக்க
ஓயும் நொடியின்றி ஓடியவர்! - சாயுங்கால்
போர்க்களத்தை வீசும் புகழ்க்களமாய் ஆக்கியவர்!
போ்..மறத்தைச் சொல்லும் பிணைந்து!

5.
கல்வேலி கட்டிக் கணித்தே அடைத்தாலும்!
பல்வேலி கட்டிப் படைத்தாலும்! - சொல்..வேலி
நீக்கிச் சுரப்பதுபோல் நீடுபுகழ் மாவீரர்
தாக்கித் தகா்த்தார் தடை!

6.
எண்ணில் அடங்கா எழிலுடைய மாவீரர்
மண்ணில் விளைந்திடுவார் மாண்பேந்தி! - கண்ணின்
மணியானார்! காக்கும் அரணானார்! வாழ்வின்
அணியானார் என்றும் அவா்!

7.
செங்களம் ஆடிச் சிரித்திட்ட மாவீரர்
எங்குள போதும் எமைக்காப்பார்! - சிங்களா்
கொட்டம் அடக்கிக் கொடுமைத் தலையொடிப்பார்!
கொட்டும் முரசைக் குவித்து!

8.
பிறப்பதுவும் பின்னே இறப்பதுவும் உண்மை!
சிறப்பதுவே வாழ்வு! சிதைந்து - சிறைக்குள்ளே
வாடுவதோ? வன்வேங்கை மாவீரர் ஈகைக்கே
ஈடெதுவோ? தோழா இயம்பு!

9.
அஞ்சாப் புலிநிகா்த்தார்! பேராண்மை வான்நிகா்த்தார்!
துஞ்சா துழைத்துத் துயர்துடைத்தார்! - நெஞ்சேந்தித்
தன்னேர் இலாத தலைவன் வழிநடந்தார்!
பொன்னோ்..மா வீரரைப் போற்று!

10.
ஈடில்லாத் தம்முயிரை ஈந்தனரே! நாமுற்ற
பீடில்லா வாழ்வைப் பிழிந்தனரே! - நாடெல்லாம்
கூடி எதிர்த்தாலும் குன்றாத மாவீரர்!
பாடித் தொழுவேன் பணிந்து!

26.11.2014

dimanche 23 novembre 2014

என்னைக் கஞ்சி காய்ச்சிகிறாள்




என்னைக் கஞ்சி காய்ச்சுகிறாள்

ஆண்:

நெஞ்சிக் குள்ளே புகுந்து நீயும்
     கஞ்சி காய்ச்சறையே! - என்னைக்
     கஞ்சி காய்ச்சறையே!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் போது
     மிஞ்சி ஓடறையே! - ஐயோ
     மிஞ்சி ஓடறையே!

பெண்:

பிஞ்சிக் கொடியைப் போன்ற என்னுள்
     பித்தை ஏத்தறையே! - ஆசைப்
     பித்தை ஏத்தறையே!
அஞ்சி அஞ்சி நகரும் என்னை
     அழகாய் மாற்றறையே! - ஐயோ
     அழகாய் மாற்றறையே!

ஆண்:

பஞ்சி மிட்டாய்ச் சட்டை போட்டுப்
     பசியைத் துாண்டறையே! - பெரும்
     பசியைத் துாண்டறையே!
விஞ்சி விஞ்சி ஆசை துள்ள
     வித்தை காட்டறையே! - விழி
     வித்தை காட்டறையே!

பெண்:

மஞ்சி விரட்டு மாட்டைப் போன்று
     வம்பு பண்ணறையே! - வீண்
     வம்பு பண்ணறையே!
வஞ்சிக் கொடிதான் வளைந்து சுற்றக்
     கொம்பாய் நிற்கறையே! - ஐயோ
     தெம்பாய் நிற்கறையே!

ஆண்:

வஞ்சி உன்றன் வண்ண விழியால்
     மஞ்சம் தீட்டறையே! - பொன் 
     மஞ்சம் தீட்டறையே!
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கும் போது
     கேள்வி கேட்கறையே! - ஐயோ
     கேள்வி கேட்கறையே!

பெண்:

பஞ்சி வெள்ளைப் பற்கள் காட்டிப்
     பாட்டு பாடறையே! - தமிழ்ப்
     பாட்டு பாடறையே!
நஞ்சிப் போக நயமாய்ப் பேசிக்
     கூட்டுச் சேரறையே! - கால்
     பூட்டுப் போடறையே!

ஆண்:

பஞ்ச வண்ணக் கிளியாய் வந்து
     பாடாய்ப் படுத்தறையே! - நெஞ்சை
     ஓடாய் நொறுக்கறையே!
நஞ்சை புஞ்சை விளைந்தி ருக்கப்
     பஞ்சம் காட்டறையே! - என்மேல்
     வஞ்சம் கூட்டறையே!

பெண்:

பஞ்சம் இல்லாப் பார்வை யாலே
     பற்றி இழுக்கறையே! - ஆசை
     முற்றிக் கொழுக்கறையே!
துஞ்சும் போதும் துாபம் போட்டுத்
     தொல்லை கொடுக்கறையே! - மனத்தைக்
     கொள்ளை அடிக்கறையே!

ஆண்:

இஞ்சி இடுப்பை இனிதாய்க் காட்டி
     என்னை அசத்தறையே! - இரு
     கண்ணை நசுக்கறையே!
செஞ்சிக் கோட்டை வீரன் என்னைக்
     குச்சாய் ஒடிக்கறையே! - பொய்
     வைச்சி நடிக்கறையே!

பெண்:

தஞ்சா ஊரின் பொம்மை போலத்
     தலையை ஆட்டறையே! - சுகக்
     கலையைக் காட்டறையே!
கஞ்சா போதைக் கண்ணைக் காட்டிக்
     கதையை முடிக்கறையே! - அன்பு
     விதையை விளைக்கறையே!


ஆண்: 

அத்தை பெத்த அல்வா துண்டே
     அருகே வந்துவிடு! - வாய்
     அமுதைத் தந்துவிடு!
தத்தை மொழியில் தமிழைப் பேசித்
     தாகம் தீா்த்திவிடு! - இன்
     மோகம் சோ்த்துவிடு!

பெண்:

கத்தை மல்லி கமழக் கமழ
     மெத்தை அமைக்காதே! - எழில்
     சொத்தைப் பறிக்காதே!
முத்தைத் தந்து முத்தம் கேட்டு
     மூளை கெடுக்காதே! - இரு
     காலைப் பிடிக்காதே!

ஆண்:

குண்டு கட்டாய்க் குட்டி உன்னைக்
     கூடை துாக்கிடவா? - மண
     மேடை போட்டிடவா!

பெண்:

நண்டுப் பிடிகள் போட்டே உன்னை
     நானும் தாக்கிடவா! - இன்பம்
     நாளும் ஊக்கிடவா!

ஆண்:

தொண்டு புரியும் துாய மனத்தைக்
     கண்டு களித்திடவா! - தேன்
     உண்டு சுவைத்திடவா!

பெண்:

வண்டாய் வந்து மலரில் அமர்ந்து
     ஆடி நனைந்திடவா! - மாலை
     சூடி இணைந்திடவா!

23.11.2014

dimanche 16 novembre 2014

ஒரு - ஓர் விளக்கம்!




தமிழில் ஒரு ஓர் என்ற இரண்டு சொற்களும் ஒருபொருள் குறிப்பன. எவ்விடத்தில் ஒரு வரும்? எவ்விடத்தில் ஓர் வரும்? சிலர் பாடல்களில் நிரையசை வேண்டுமிடம் ஒரு என்ற சொல்லையும், நேரசை வேண்டுமிடம் ஓர் என்ற சொல்லையும் பயன்படுத்துவதைக் காண்கிறேன். பலர் விரும்பிய வண்ணம் இவ்விரு சொல்லை கையாள்வதைக் காண்கிறேன்.

ஆங்கில மொழியில் 'an' 'a' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். உயிரெழுத்துக்கு முன்னே 'an' வரும் (an apple),  மெய்யெழுத்துக்கு முன்னே 'a' வரும் (a book).

பிரஞ்சு மொழியில் 'un' 'une' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். ஆண்பால் சொல் முன்னே 'un' வரும். ஒரு பையன் என்பதை 'un garçon' என்று எழுதுவர். பெண்பால் சொல் முன்னே 'une' வரும். ஒரு பெண் என்பதை 'une femme' என்று எழுதுவர்.

தமிழில் ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில் வருமொழியில் உயிரெழுத்துக்களும், யகர ஆகாரமும் முதலாகிய மொழிகள் வருமிடங்களில் நிலைமொழியாகக் கொள்ளப்படும் ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாக, ரு என்பதன் கண் உள்ள உகரம் கெட, ஒரு என்பது ஓர் என்று ஆகும். இதனைத் தொல்காப்பியம் எழுத்து 479 ஆம் நுாற்பா உரைக்கும்.

"அதனிலை உயிர்க்கும் யாவரும் காலை
முதனிலை ஒகரம் ஓஆகும்மே
ரகரத்து உகரம் துவரக் கெடுமே"

ஒரு + அரசு = ஓர் அரசு
ஒரு + இரவு = ஓர் இரவு
ஒரு + யானை = ஓர் யானை

என்றாற்போல் வருவன வழாநிலையாம்.

இருபுலவா், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல் வருவன யாவும் வழூஉத் தொடர் ஆகும். புலவா் இருவா், ஆழ்வார் பன்னிருவா், நாயன்மார் அறுபத்து மூவா் என்றாற்போல் அமைக்கப்படும் தொடர்களே வழாநிலை யாகும்.

ஓா் அரசன் என்பது வழு. அரசன் ஒருவன் என்று கூறுதலே வழாநிலை யாகும்.

பல அரசா், சில அரசா் என்றாற்போல் வருவனவற்றைப் பலா் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்வர் உரையாசிரியர்கள். [தொ.எ.153 நச்] எனவே இவற்றையும் அரசர் பலர், அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.

16.11.2014
 

vendredi 7 novembre 2014

ஓம்மென்னும் உருவம்




ஓம்மென்னும் உருவம்

1.
யானை முகத்தவனே! பானை வயிற்றவனே!
வானை புவியை வடித்தவனே! - ஊனிலென்
கூனை நிமிர்த்திக் குறையகற்றி என்..கையால்
தேனை நிகர்த்தகவி தீட்டு!

2.
செம்மைத் தமிழ்ஊட்டி! சிந்தனைச் சீரூட்டி!
எம்மை இனிதே இயக்கிடுக! - இம்மண்ணின்
நம்பிக்கை நாதனே! நல்ல கணபதியே!
தும்பிக்கை யால்எனைத் தூக்கு!

3.
பொன்னூல் படைத்தவனே! ஓங்கு தமிழ்மணக்க
பன்னூல் படைத்தவனே! பண்பருளும் - இன்ஓளவை
தன்னுள் இருந்து தழைத்தவனே! எந்நாளும்
என்னுள் இருந்தே எழுது!

4.
வங்கக் கடலருகே வாழும் மணத்தவனே!
எங்கள் புதுவைக் கினியவனே! - பொங்குமொளி
தங்க மனத்தவனே! தந்த முகத்தவனே!
சங்கத் தமிழ்மூன்றும் சாற்று!

5.
முன்னவனே! முத்தமிழை முக்கனியாய்த் தந்தவனே!
பொன்னவனே! என்னுள் புகுந்தவனே! - என்னவனே!
மின்னவனே! இன்பம் விளைப்பவனே! இவ்வுலகின்
மன்னவனே! வந்தெனை வாழ்த்து!

6.
வலிமேல் வலிவந்து வாடுகிறேன்! நீயோ
எலிமேல் அமர்ந்தே எழுவாய் - புலிபோல்
வளிபோல் புறப்பட்டு வந்தே..நீ வன்மை
உளிபோல் துயரை ஒதுக்கு!

7.
தாமரை தந்தேன்! கனிகள் பலதந்தேன்!
மாமறை மன்னா! தருகதமிழ்ப் - பூமழையை!
நாமரை நாயகியின் நற்கருணைக்(கு) ஆளாக்கிப்
பாமறை யாவும் பயிற்று!

8.
சின்ன எலியுன்னைச் சீராய்ச் சுமர்ந்திடுமோ?
என்ன பொருளென்றே எண்ணுகிறேன்! - என்றென்றும்
அன்பிருந்தால் ஆண்டவன் நல்லடியைக் கண்டிடலாம்!
என்றுணரச் செய்யும் எலி!

9.
நாமென்னும் எண்ணம் நகர்ந்திட்டால் நெஞ்சத்துள்
ஓமென்னும் எண்ணம் ஒளிர்ந்திடுமே! - காம்பொன்றைக்
பாம்பென்று பார்த்துப் பயந்தோடும் பொய்யோட்டும்
ஓம்மென்னும் முன்னோன் உரு!

10.
சவ்வாதும் நற்சாம் பிராணியும் தாமரையும்
அவ்வாறு நீரும் அளித்திடுவேன்! - அவ்வைபோல்
செவ்வாழை செங்கரும்பு செங்கனிகள் சோ்த்தளிப்பேன்!
இவ்வேழை வாழவழி எண்ணு!

01.09.2000

lundi 3 novembre 2014

சிவ வாசகம்


கவிஞா் இரா. குமாரின்
சிவவாசகம்
நடைமுறை இதழியல்

வணக்கம்!

பிரான்சு கம்பன் விழாவிற்கு வருகை தந்த பேச்சாளா் . இரேணுகா தேவி அவா்களிடம், என் இனிய முகநுால் நணபா் கவிஞா் இரா குமார் அவா்கள், "சிவவாசகம்", "நடைமுறை இதழியல்" என்ற நுால்களைக் கொடுத்தனுப்பினார். மிக்க நன்றி!

கவிஞா் இரா. குமார் எழுதிய சிவவாசகம், நடைமுறை இதழியல் நுால்களைப் பற்றி விரிவாகப் பின்பு கருத்திடுவேன்.

கம்பன் விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இலக்கியச்சுடா் . இராமலிங்கம் அவா்களின் சொற்பொழிவாலும், திருமதி  அ.இரேணுகாதேவின் சொற்பொழிவாலும் இவ்வாண்டுக் கம்பன் மிக மிகச் சிறப்பாக அமைந்தது. அவா்களுக்கு என்றன் நன்றி!

நற்சிவ வாசகத்தை நல்ல நடைமுறையைப்
பொற்புடன் தந்தார் புகழ்குமார்! - கற்றுக்
களித்தேன்! கவிஞன்யான் கன்னற்றேன் ஆற்றில்
குளித்தேன் முழுதும் குளிர்ந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு