vendredi 15 janvier 2016

தைம்மகள் குறட்பத்து!




தைம்மகள் குறட்பத்து!

1.
தங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
பொங்கல் மணக்கப் பொலிந்து!

2.
சங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
எங்கும் இனிமை இசைத்து!

3.
தழைத்தோங்கும் இன்பத்தைத் தைம்மகளே தாராய்!
விழித்தோங்கும் மெய்ம்மை விளைத்து!

4.
சாதிமதத் தீதகற்றித் தைம்மகளே! சன்மார்க்க
சோதி அளிப்பாய் தொடர்ந்து!

4.
தலைமை தலைமையெனத் தைம்மகளே சில்லோர்
உலகைக் சுருட்டுகிறார்! ஓட்டு!

5.
தாரணிக்கு அன்பூட்டித் தைம்மகளே! மாண்பொளிரும்
சீரணிக்குள் வாழ்வைச் செலுத்து!

6.
தாராய் நலமெல்லாம் தைம்மகளே! சால்பொளிரும்
கூரறிவை நன்றே குவித்து!

7.
தன்னே ரிலாவுழவன் தைம்மகளே இன்பமுற
இன்னே வழிகள் இயற்று!

8.
தமிழர் விழைகின்ற தைம்மகளே! பொங்கல்
அமுத விருந்தை அளி!

9.
தமிழரின் புத்தாண்டே! தைம்மகளே! என்றும்
கமழ்வாய் மனத்துள் கலந்து!

10.
தண்டமிழ் வாழியவே! தைம்மகளே வாழியவே!
தொண்டுளம் வாழியவே சூழ்ந்து!

15.01.2016

vendredi 1 janvier 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!



புத்தாண்டே வா..வா பொலிந்து!

எங்கும் இனிமை இசைந்தாட! கற்றோங்கிப்
பொங்கும் புலமை பொலிந்தாட! - தங்குநலம்
பூத்துக் கமழ்ந்தாடப் புண்ணியனே! புத்தாண்டைக்
காத்துப் படைப்பாய் கணித்து!

ஒற்றுமை ஓங்கிடவும் இவ்வுலகே ஓரினமாம்
பற்றினை உற்றன்பு பாடிடவும் - நற்குறளைக்
கற்றுக் களித்திடவும் கண்ணனே! புத்தாண்டைப்
முற்றும் மகிழ்வுற மூட்டு! 

01.01.2015