lundi 8 août 2016

சிலேடை வெண்பா



சி

1.
தமிழும் திருமாலும்!

அடிதேடி அன்பர் அணிவகுப்பார்! மின்னும்
முடிசூடிக் காணமுன் நிற்பார்! - படி..பாடித்
தொண்டர் பயனுறுவார்! துாய தமிழ்மொழியைத்
கொண்டல் திருமாலைக் கூறு!

2.
தமிழும் தாயும்!

என்னை உலகில் எழிலுறச் செய்தவள்!
பொன்னை நிகர்த்தபுகழ் பூத்தவள்! - முன்னைப்
பயனென வந்தவள்! பாட்டளித்த தாயும்
துயரறு தண்டமிழும் சொல்லு!

3.
தமிழும் மதுவும்!

போதை கொடுக்கும்! புகுந்து மனத்துள்ளே
கோதை கொடுக்கும் குளிரூட்டும்! - பாதையெங்கும்
பாடிக் கிடக்கும்! பசுந்தமிழால் உண்மதுவால்
ஆடிக் கிடக்கும் அகம்!

4.
தமிழும் மலரும்!

மணம்சூட்டும்! கன்னல் மதுவளிக்கும்! மாண்பார்
குணங்காட்டும்! கொஞ்சுமொழி கூட்டும்! - மனஞ்சாற்றும்
கற்பனைக்குக் காதல் கலையூட்டும்! இன்றமிழும்
பொற்புடைய பூவும் பொலிந்து!

5.
தமிழும் தோப்பும்!

மாவும் புளியும் விளமும் வளங்கொடுக்கப்
பூவும் கனியும் பொலிந்திருக்கக் - கூவும்
குயிலும்! மயிலும்! குலவிமகிழ் தோப்பும்
உயர்தமிழும் ஒன்றென ஓது!

6.
தமிழும் கடலும்!

எண்ணிலாச் செல்வம்! இயம்பிடாப் பேரழகு!
மண்ணெலாம் வாழ வழங்குவளம்! - மின்னணிகள்
சூடும்! இனிய அலைதொடரும்! நற்கடலும்
பாடும் தமிழும் பகர்!

7.
தமிழும் வள்ளளும்!

வாரி வழங்கும் வளமிருக்கும்! வான்கொண்ட
மாரி வழங்கும் மகிழ்விருக்கும்! - சீரணிகள்
பூண்டு புகழொளிரும்! பூந்தமிழும் வள்ளலும்
ஆண்டு சிறப்பொளிரும் ஆடு!

8.
தமிழும் வானும்

எல்லை யிலாவிரிவோ[டு] என்றும் இருப்பனவாம்!
கொல்லை மலர்க்கூட்டம் கொண்டனவாம்! - நல்ல
மதியொளிர வாய்த்தனவாம்! வானும் தமிழும்
அதிமதுர ஞானமாம் ஆடு!

9.
தமிழும் முக்கனியும்!

மூன்று சுவையிருக்கும்! மூவாப் புகழிருக்கும்!
ஆன்றோர் உரையுள் அமர்ந்திருக்கும்! - சான்றோர்தம்
மன்றில் நிறைந்திருக்கும்! மாத்தமிழும் முக்கனியும்
என்றும் இருக்கும் இனித்து!

10.
தமிழும் மரமும்!

பூவுண்டு! வண்ணப் பொலிவுண்டு! காயுண்டு!
நாவுண்ண நற்றேன் கனியுண்டு! - மேவும்
நிழலுண்டு! வன்மரமும் நீள்தமிழும் ஒன்றும்
அழகுண்டு செம்மை அடர்ந்து!

11.
தமிழும் மழையும்!

பொழிந்தின்பம் மூட்டும்! புகழ்ப்புலவன் என்மேல்
வழிந்தின்பம் ஊட்டும்! வளத்தை - வழங்கும்!
அமுதென்று பேரேற்கும்! தண்மை அளிக்கும்!
தமிழ்மொழியும் வான்மழையும் சாற்று!

12.
தமிழும் ஆவும்!

அசைபோடும்! துள்ளியடி போடும்! தொடையால்
நசையூறும்! நற்றமிழும் ஆவும் - இசைந்தழகாய்ப்
பாலுாட்டும்! என்றும் பயனுட்டும்! சீர்முந்தி
வாலாட்டும் இன்பம் வடித்து!

1 commentaire:

  1. தமிழைத் தாங்கள் போற்றும் முறை அலாதியாக உள்ளது. தொடர்ந்து தங்களின் பதிவுகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய சொல், புதிய பயன்பாடு. படிக்கப்படிக்க ஆவலாக உள்ளது.

    RépondreSupprimer