vendredi 26 janvier 2018

விருத்த மேடை - 9

விருத்த மேடை - 9
  
அறுசீர் விருத்தம் - 9
[மா + மா + மா + மா + மா + மா]
  
எண்ணுவது உயர்வு!
  
கள்ளம் இல்லா எண்ணம்
   கமழும் வாழ்வைக் காட்டும்!
குள்ளம் இல்லா எண்ணம்
   கோல அழகைத் தீட்டும்!
துள்ளல் இல்லா எண்ணம்
   துன்னும் துயரை ஓட்டும்!
உள்ளம் ஓங்கும் எண்ணம்
   ஒளிரும் புகழைச் சூட்டும்!
  
ஆறு மாச்சீர்கள் ஓரடியில் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
  
ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
குறிலிணை ஒற்றைத் தொடக்கமாகக் கொண்ட புளிமாச்சீர் [இளைத்து] ஓசை நயத்தைக் குறைக்கும், ஆதலால் அச்சீர் இன்றி வருதல் சிறப்புடையது. [அச்சீர் அருகி வருதல் உண்டு]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.01.2018

mardi 23 janvier 2018

விருத்த மேடை - 7



விருத்த மேடை - 7

அறுசீர் விருத்தம்  - 7
[மா + மா + மா + மா + மா + காய்]

ஆண்மை தவறேல்

நேர்மை ஏந்தும் நெஞ்சம் வேண்டும்!
   நினைவில் உறுஞ்செயலில்
சீர்மை ஏந்தும் செம்மை வேண்டும்!
   சிந்தை உறுங்கவிகள்
கூர்மை ஏந்தும் கொள்கை வேண்டும்!
   கொண்ட மனைமறவா
நீர்மை ஏந்தும் நிலைமை வேண்டும்!
   நெடியோன் அருளுகவே!

ஓரடியில் முதல் ஐந்து சீர்கள் மாச்சீர்களாகவும், ஆறாம் சீர் காய்ச்சீராகவும் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
 
இலக்கணம் நுாற்பா
  
மாச்சீர் ஐந்து காய தொன்று
வண்டார் குழன்மாதே!
      - விருத்தப் பாவியல் [7]

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.01.2018

விருத்த மேடை - 8

விருத்த மேடை - 8
  
அறுசீர் விருத்தம் - 8
[மா + மா + மா + மா + மா + மாங்காய்]
  
உடலினை உறுதி செய்!
  
உடலும் உயிரும் உறுதி ஏற்க
   உழைத்து வாழ்வோமே!
குடலும் பெருகக் குந்தி உண்ணக்
   குலைந்து தாழ்வோமே!
மடலும் மதுவும் மணக்கும் தமிழை
   வடித்து மகிழ்வோமே!
சுடரும் வண்ணத் துாய நெறியைச்
   சுவைத்துப் புகழ்வோமே!
  
ஓரடியில் முதல் ஐந்து சீர்கள் மாச்சீர்களாகவும், ஆறாம் சீர் மாங்காய்ச் சீராக வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.01.2018

dimanche 14 janvier 2018

தமிழர் புத்தாண்டே வருக!


தமிழர் புத்தாண்டே வருக!
  
எடுப்பு
புத்தாண்டே வருக! - தமிழர்
புகழ்..ஆண்டே வருக!
            [புத்தாண்டே]
  
தொடுப்பு

முத்தாண்டே வருக! - உலக
முதலாண்டே வருக!
            [புத்தாண்டே]
  
முடிப்பு
செழித்தோங்கும் தையெனும் பெயர்கொண்டு - ஆற்றும்
செயலோங்கும் அறமெனும் நலங்கண்டு!
விழித்தோங்கும் திறமெனும் உரமுண்டு - நன்றே
விளைந்தோங்கும் உழவெனும் வரம்தந்து!
            [புத்தாண்டே]
  
வன்மையொளிர் புலி..பறக்கும் கொடிபிடித்து - பொன்
வண்ணமொளிர் மீன்..பறக்கும் புகழ்விரித்து!
நன்மையொளிர் வில்..பறக்கும் எழில்வடித்து - இறை
ஞானமொளிர் தமிழ்மணக்கும் கவிபடைத்து!
            [புத்தாண்டே]
  
பொற்புடைய பெருங்குறளின் பேரேந்தி - நற்
கற்புடைய நறுஞ்சிலம்பின் சீரேந்தி!
பற்றுடைய திருமுறையின் தாரேந்தி - தேன்
முற்றுடைய அருங்கம்பன் தேரேந்தி!
            [புத்தாண்டே]
  
அன்பேந்தி! அருளேந்தி! அழகேந்தி! - நல்
அறமேந்தி! அறிவேந்தி! அணியேந்தி!
இன்பேந்தி! இயலேந்தி! இசையேந்தி! - பஞ்சு
இளமேந்தி! இனிப்பேந்தி! இனமேந்தி!
            [புத்தாண்டே]
  
மொழிகாக்கும் தமிழ்த்தலைவன் ஆட்சியுற - பூத்த
பொழில்காக்கும் மதுநுால்கள் மாட்சியுற!
வழிகாக்கும் படைவீரம் மீட்சியுற - பே
ரெழில்காக்கும் கொடையீரம் காட்சியுற!
            [புத்தாண்டே]
  
உலகெலாம் தமிழ்நெறி உலவிடவும் - நம்
உளமெலாம் குறள்நெறி குலவிடவும்
நிலமெலாம் சமநெறி நிலவிடவும்
நிறைவெலாம் தரும்நெறி வலமிடவும்
            [புத்தாண்டே]
  
வயலாடும் மண்ணோங்கித் திகழ்ந்திடவும் - கண்ணில்
கயலாடும் பெண்ணோங்கி மகிழ்ந்திடவும்
உயிர்பாடும் பண்ணோங்கி உவந்திடவும் - எம்
செயல்யாவும் தண்ணோங்கித் தவழ்ந்திடவும்
            [புத்தாண்டே]
  
காளையுடன் காளையர்கள் விளையாட - உயர்
காதலுடன் கன்னியர்கள் கவிபாட!
சோலையுடன் பெரும்புலமை உறவாட - உயிர்ச்
சொந்தமுடன் இவ்வுலகே சுவைசூட!
            [புத்தாண்டே]
  
தோப்பழகு பூத்தாடும் வண்ணத்தில் - என்
யாப்பழகு பூத்தாடும் எண்ணத்தில்!
காப்பழகு பூத்தாடும் உள்ளத்தில் - தமிழை
நாப்..பழகு பூத்தாடும் இன்பத்தில்!
            [புத்தாண்டே]
  
பணியொளிரும் தைம்மகளே! பண்பொளியே! - குளிர்
பனியொளிரும் தைம்மகளே! விண்ணொளியே!
அணியொளிரும் தைம்மகளே! பொன்னொளியே! - என்
அகமொளிரும் தைம்மகளே! தமிழொளியே!
            [புத்தாண்டே]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.01.2018

samedi 13 janvier 2018

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
வணக்கம் ஐயா
  
பல் +கலை = பல்கலை என்று இயல்பாய் வரும் என்றுரைத்தீர். பல்+திறம் = பஃறிறம் என்று புணரும் என்றுரைத்தீர். பல்+பொடி = பற்பொடி என்று வருகிறது. விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
திருமதி பத்மனி கேசவகுமார். சேலம்
-----------------------------------------------------------------------------------------------
  
பல்கலை, பல்திறம் என்பது, பலவகைக் கலைகளையும், பலவகைத் திறமைகளைக் குறிக்கும். இங்குப் பல் என்பது பல என்ற பன்மையைக் குறிக்கும் சொல்லாகும். பல் முன் ககர இனமும், சகர இனமும், பகர இனமும் ஆகிய வல்லின எழுத்துக்கள் இயல்பாகப் புணரும், தகர இனமாகிய வல்லின எழுத்துகள் வர 'ல்' என்ற ஒற்று ஆய்தமாக [ஃ] மாறும்.
  
பற்பொடி என்பது பல்லை விளக்கப் பயன்படும் துாள் என்ற பொருளைத் தரும். இவ்விடத்தில் பல்+பொடி = பற்பொடி என்றே வரும்.
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்! மெலி
மேவின் ன.ண.வும், இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப! [நன்னுால் - 227]
  
1.
கல்+சிலை = கற்சிலை
முள்+செடி = முட்செடி
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் வேற்றுமையில் ற், ட் ஆயின.
  
2.
கல்+தீது = கற்றீது
வில்+புருவம் = விற்புருவம்
முள்+தீது = முட்டீது
முள்+பல் = முட்பல்
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ற், ட், ஆயின.
  
3.
கல்+சிறிது = கல்சிறிது, கற்சிறிது
முள்+சிறிது = முள்சிறிது, முட்சிறிது
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ஒருகால் இயல்பாகியும், ஒருகால் திரிந்தும் உழழ்ந்தன.
  
4.
நெல்+மலிந்தது = நென்மலிந்தது [அல்வழி]
முள்+மாய்ந்தது = முண்மாய்ந்தது [அல்வழி]
  
நெல்+மலிவு = நென்மலிவு [வேற்றுமை]
முள்+முனை = முண்முனை [வேற்றுமை]
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி மெல்லினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் ன், ண், ஆகத் திரிந்தன.
  
5.
நெல்+விளைந்தது = நெல் விளைந்தது [அல்வழி]
முள்+வளர்ந்தது = முள் வளர்ந்தது [அல்வழி]
  
நெல்+வளம் = நெல் வளம் [வேற்றுமை]
முள்+வன்மை = முள் வன்மை [வேற்றுமை]
  
ல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி இடையினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் இயல்பாயின.
  
ஒப்புமை நுாற்பாக்கள்
  
லகார இறுதி னகார இயற்றே [தொல் - 367]
  
மெல்லெழுத்து இயையின் னகார மாகும் [தொல் - 368]
  
அல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 369]
  
ளகார இறுதி ணகார இயற்றே [தொல் - 397]
  
மெல்லெழுத்து இயையின் ணகார மாகும் [தொல் - 398]
  
அல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 399]
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்! மெலி
மேவின் ன.ண.வும், இடைவரின் இயல்கும்
ஆகும் இருவழி யானும் என்ப! [இலக்கண விளக்கம் - 137]
  
ல.ள.வேற்றுமையில் ற.ட.வும், அல்வழி
அவற்றோடு உறழ்வும், வலிவரின், தவ்வரின்
இயல்பும் திரிந்தபின் கெடுதலும் ஆகும்
லளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்
திரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப
லளமுன் மெலிவரின் இருவழி னணஆம்
அவற்றுள் ணத்திரிந்து அழிவாம், தனிக்குறில்
நண்ணிய லளமுன் ணவ்வும் னண ஆம். [தொன்னுால் விளக்கம் - 26]
  
லகாரம் வேற்றுமைக்கண் றகர மாகும் [முத்து வீரியம் - 350]
  
மெல்லெழுத்து இயையின் னகர மாகும் [முத்து வீரியம் - 351]
  
அல்வழி யெல்லாம் உறழும் என்ப [முத்து வீரியம் - 354]
  
-----------------------------------------------------------------------------------------------
  
அல்வழியில் தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற ல், ள் என்னும் மெய்கள் முன் தகரவினம் வருமானால் ஆய்தமாகத் திரிதலையும் ஏற்கும்.
  
கல்+தீது = கஃறீது
முள்+தீது = முஃடீது
  
குறில்வழி 'லள' த் த அணையின், ஆய்தம்
ஆகவும் பெறுாஉம் அல்வழி யானே [நன்னுால் - 228]
  
ஒப்புமை நுாற்பாக்கள்
  
தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின்று என்மனார் புலமையோரே [தொல் - 370]
  
ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉம் காலை யான [தொல் - 400]
  
குறில்வழி 'லள'த்தவ்வு அணையின் ஆய்தம்
ஆகவும் பெறுாஉம் அல்வழி யணானே [இ.வி - 138]
  
தகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 358]
  
தகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 382]
  
லளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்
திரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப [தொ.வி. - 26. 4 - 5]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2018

வெண்பா மேடை - 61

வெண்பா மேடை - 61
  
குறட்டாழிசை - 3
  
1.
செல்லமே என்று சொல்லும் பொழுதெலாம்
வெல்லமே வந்து மேவி இனிக்குதடி!
  
2.
வஞ்சிக் கொடியே! வண்ண மதுமலரே!
கொஞ்சும் உன்மொழி நெஞ்சை உருக்குதடி!
  
3.
வீசும் காற்றே! விந்தை நடத்துடன்
பேசும் அழகு பித்தம் கொடுக்குதடி!
  
4.
செவ்விதழ் அசைந்து செப்பும் சீரெலாம்
அவ்விறை வீட்டின் அமுதை அளிக்குதடி!
  
5.
முல்லைப் பற்களை முட்டி வரும்மொழி
எல்லை இல்லா இன்பம் இசைக்குதடி!
  
6.
தாமரை இதழ்..நா தவழ்ந்து வரும்மொழி
பாநிறை ஏந்திப் பாசம் படைக்குதடி!
  
7.
மீட்டும் யாழென மெல்லொலிச் சொல்லெலாம்
ஊட்டும் தேனினைக் கூட்டிக் கொடுக்குதடி!
  
8.
வல்லொலிச் சொற்கள் வண்ண நடையுடன்
கொல்லெழில் ஏந்திக் கொள்ளை நடத்துதடி!
  
9.
இடையொலிச் சொற்கள் இளமைத் தமிழ்தரும்
படையுடன் வந்து பற்றிக் களிக்குதடி!
  
10.
பச்சைக் கிளியாய்ப் பகரும் சொல்லெலாம்
இச்சை யளித்தே வித்தை காட்டுதடி!
  
11.
கோலக் குயிலாய்க் கூவும் குரலிசை
கால மெல்லாம் காதல் கூட்டுதடி!
  
12.
கோதை நல்கும் குளிர்ந்த உரையெலாம்
போதை நல்கும் புலமை விளைக்குதடி!
    
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வருவதும் குறட்டாழிசை யாகும்.
    
ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். எத்தளையும் வரலாம். இரு அடிகளிலும் சீரின் எண்ணிக்கை ஒன்றுபட்டு வரவேண்டும்.
    
[மேலுள்ள பாடல் சிற்றின்பக் கருத்தை ஏந்தி வந்ததால் குறட்டாழிசை யானது]
  
இரண்டடிகளும் ஓரெதுகை பெற்று வரும். இரண்டடிகளிலும் தகுந்த இடத்தில் மோனை பெற்றொளிரும்.
  
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து, விழுமிய பொருளின்றி, ஒழுகிய ஓசையின்றி வரும் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2018

samedi 6 janvier 2018

வெண்பா மேடை - 59



வெண்பா மேடை - 59

குறட்டாழிசை

குறள் வெண்பாவின் இனமாகக் குறட்டாழிசை அமைகிறது. தாழம்பட்ட ஓசையோடு வருதல்பற்றிக் குறட்டாழிசை  எனப்பட்டது [தாழம் - மந்தம்]

மூன்று வகையான குறட்டாழிசைகள் உள்ளன.

1.
செப்பலோசையில் சிதைந்து, வேற்றுத்தளை கலந்து, குறள் வெண்பாவின் சிதைவாய் வருவன குறட்டாழிசை எனப்படும்.

2.
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து ஈற்றடி குறைந்து வருவன குறட்டாழிசை எனப்படும்.

3.
அடி இரண்டாய் அளவொத்து விழுமிய பொருளும் ஒழிகிய ஓசையும் இல்லாமல் வெண்செந்துறையில் சிதைந்து வருவன குறட்டாழிசை எனப்படும்.

குறட்டாழிசை - 1

1.
காலை கசந்ததடி! கன்னல் மொழியின்றி
மூளை  நிற்கும் முரண்டு!

2.
மாலை வெறுத்ததடி! மாதே நீயின்றிச்
சோலை வாடும் சுருண்டு!

3.
மார்பு துடிக்குதடி! மானே நீயின்றி
வாழ்வு பெறுமோ வளம்?

4.
சொல்லும் மாறியதேன்? துாயவளே! காத்திருப்புக்
கொல்லும் உயிரைக் குடித்து!

5.
நெஞ்சம் ஏங்குதடி! நேரிழையே! உன்னுடைய


பிஞ்சு  விரல்தந்த பித்து!

6.
ஆசை பெருகுதடி! ஆருயிரே! உன்கொலுசு 
ஓசை ஊட்டும் உணர்வு!

7.
அன்பு சுரக்குதடி! ஆரணங்கே! அமுதுாறும்
இன்பத் தமிழை இசைத்து!  

8.
உள்ளம் உருகுதடி உன்றன் நினைவினிலே!
துள்ளும் கனவுகள் தொடர்ந்து!

9.
இதயம் வெடித்ததடி! என்னவளே நீயின்றி
உதயம் வருமோ உயிர்க்கு?

10.
சிந்தை சிதைந்ததடி! செல்லமே! நீயின்றிக்
கந்தை யாகும் கவி!

மேலுள்ள குறட்பாக்கள்,செப்பலோசை சிதைந்து வேற்றுத்தளை கலந்து, குறள் வெண்பாவின் சிதைவாய் வந்த குறட்டாழிசை ஆகும்.

குறள் வெண்பாவின் சிதைவாய் வந்த குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத்  தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்

பல் +திறம் = பற்றிறம் என்று புணருமா? இலக்கணக் இலக்கியக் குறிப்புடன் விளக்கம் அளிக்கவும்.

கவிமாமணி சேலம் பாலா

--------------------------------------------------------------------------------------------------------------------------

பல, சில என்னும் சொற்கள் நிலைமொழியாக அமையும்போது இந்தச் சொற்களின் ஈற்றிலுள்ள அகரம் கெட்டும் புணர்வதுண்டு. பல, சில என்னும் சொற்களின் ஈற்றில் நிற்கும் அகரம் மறைந்துவிட, எஞ்சி நிற்கும் 'லகர' மெய்யுடன் வருமொழி முதலில் உள்ள ஒலி வந்து சேரும். இப்படிச் சேரும்போது, சில சமயங்களில் இயல்பாகவும், சில சமயங்களில் விகாரப்பட்டும் புணரும்.

பல்கலைக் கழகம், பல்பொருள் அங்காடி என்னும் தொடர்களில் நிலைமொழியாகிய பல என்னும் சொல் அகரம் கெட்டுப் பல் என்று நின்ற போதிலும்  பல என்னும் பொருளே தருகின்றது.  பல் என்னும் சொல்லின் முன் வல்லினம் வந்து புணரும்போது பெரும்பாலும் இயல்பாகவே புணரும்.

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் [திருப்பாவை - 18]
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் [திருப்பாவை - 27]

பல்கால், பல்கலன் என்று இயல்பாக உள்ளதை இலக்கியங்களில் கண்டு தெளிவுறலாம்.

அல்வழியில் தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற ல்,ள், என்னும் மெய்கள்,  வருமொழியில் தகரம் என்ற வல்லினம் வர  ஆய்தமாகத் திரிதலையும் பெறும்.

குறில்வழி 'லள' த்'த' அணையின், ஆய்தம்
ஆகவும் பெறுாஉம் அல்வழி யானே [ நன்னுால் 228]

பல்+துளி = பஃறுளி  
பல்+தொடை = பஃறொடை  
பல்+தாழிசை = பஃறாழிசை  
சில்+தாழிசை = சிஃறாழிசை 
அல்+திணை = அஃறிணை என்று வருவனபோல்
பல்+திறம் = பஃறிறம் என்று புணர்ந்து எழுதுவதே இலக்கிய மரபாகும்.

பல + மலர்  = பலமலர் என்று புணர்வதே பெரும்பான்மை எனினும் சொல்லின் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு எஞ்சி நிற்கும் பல்  என்னும் சொல்லுடன்  மலர் என்னும் சொல் வந்து சேரும்போது பன்மலர் என்று புணர்வதே இலக்கிய வழக்காகும். இவ்வாறே பலமுறை என்பது பன்முறை என்றும் பலமொழி என்பது பன்மொழி என்றும் திரிவதைக் காணலாம். நிலைமொழி ஈற்றில் 'லகரமெய்' நிற்கும்போது வருமொழி முதலில் மகரமெய்  வந்தால் 'லகரமெய்' 'றன்னகர' மெய்யாகத் திரியும்  என்னும் விதிக்கேற்ப இவை புணர்ந்துள்ளன.  பல + நாள் = பன்னாள் என்றும் சில + நாள் = சின்னாள் என்றும் புணரும்.  இக்கால வழக்கில் பலமுறை, பலமொழி, பலநாள், சிலநாள் என்று வழங்குவதே பெரும்பான்மையாகும்.

பல  என்னும் சொல் நிலைமொழியாகவும், வருமொழியாகவும்  அமையும்போது நான்கு வகையாகப் புணரும்.

பலசில எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும், பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற [நன்னுால் - 170]

1. பல, சில என்ற இரண்டு சொற்களும் தமக்கு முன் தாம் வரின் இயல்பாகும்.
பல + பல = பலபல
சில + சில = சிலசில

2. மிக்கு வரும்.

பல + பல = பலப்பல
சில + சில = சிலச்சில

3. ஈற்றில் உள்ள அ என்பது கெட்டு ல் என்பது ற் ஆகத் திரியும்

பல + பல = பற்பல
சில + சில = சிற்சில

4. இவற்றிற்கு முன் வேறு சொற்கள் வரின் அ உன்ற எழுத்து நீங்கலும் நிற்றலும் பெறும்.

பல + கலை = பலகலை, பல்கலை
சில + நாள் = சிலநாள், சின்னாள்
பல + ஆயம் = பலவாயம், பல்லாயம்
சில + வளை = சிலவளை, சில்வளை

பிற என்றதால், பல்பல, சில்சில  என அ கெட்டு  ற் ஆகாமல் வருதலும் உண்டு. பல்லபல, சில்லசில என மிகுந்து வருவதும் உண்டு. செய்யுட்கண் ஒரோவழிப் பல என்பதன் முன்னர்ச் சில என்பது வந்துழி இறுதி அகரம் நீண்டு ஓர் அகரமும் மகர ஒற்றும் பெற்று முடிதலும் உண்டு. [பலாஅம் சிலாஅம்] அகரமின்றி வருதலும் உண்டு [பலாம்சிலாம்] பலசில  என்னும் பொருளுடையது.

இலக்கண நுால்களில் பல சில குறித்து வந்துள்ள நுாற்பாக்கள்

தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்
லகரம் றகரவெற்று ஆதலும் உரித்தே [தொல் - 214]

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றம் [தொல் - 215]

பலசில எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும், பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற [ இலக்கண விளக்கம் - 88]

சிலபல தம்மொடு சேர்புளி இயல்பும்
முதல்மெய்க் கடைமெய் மிகலும் ஈறுபோய்
லறவ் ஆதலும் லா ஆதலுமாம்
பிறவரின் அகரம் நிற்றலும் கெடலுமாம் [தொன்னுால் விளக்கம் - 31]

பலசில எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும், பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற [ முத்துவீரியம்  - 244]

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.01.2018