mardi 6 février 2018

விருத்த மேடை - 16

விருத்த மேடை - 16
  
அறுசீர் விருத்தம் - 16
[குறிலீற்றுமா+மா+மா+மா+காய்+ மா]
  
துஞ்சும் போதும் துற்றும் போதும்
   சொல்லுவனுன் திறமே!
தஞ்சம் இல்லாத் தேவர் வந்துன்
   தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சை உண்டாய்க் கென்செய் கேனோ
   நாளுநினைந் தடியேன்!
வஞ்சம் உண்டென்[று] அஞ்சு கின்றேன்
   வலிவலமே யவனே!
         [திருஞானசம்பந்தர் - 541]
  
முத்து நீற்றுப் பவள மேனிச்
   செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தப் தெதிர்கொள் பாடிப்
   பரமனையே பணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
   சடையனவன் சிறுவன்
பத்த னுாரன் பாடல் வல்லார்
   பாதம்பணி வாரே
         [சுந்தரர். திருஎதிர்கொள்பாடி - 2]
  
இப்பாடலின் முதல்சீர் குறிலீற்று மாவாக வரவேண்டும். நல்ல, நல்லன், இவ்விரு சொற்களும் குறிலீற்று மாவாகும். எல்லா, எல்லாம், நெடிலீற்று மாவாகும்.
  
குறிலீற்றுமா+மா+மா+மா+காய்+ மா
  
என்ற வாய்பாட்டில் நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
கைத்தொழில் போற்று! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
குண்டம் செய்தல் பண்டம் செய்தல்
   கூட்டுநலம் என்பேன்!
சுண்டல் ஆக்கல் துவையல் ஆக்கல்
   துன்னுதுணை என்பேன்!
கண்டம் விட்டுக் கண்டம் சென்றால்
   காக்குமுனை என்பேன்!
கொண்ட கையே குறையைத் தீர்க்கும்
   கொண்டிடு..கைத் தொழிலே!
  
நன்மை யளிக்கும் நற்கைத் தொழிலை
   நன்றே..நீ போற்று!
வன்மை யளிக்கும்! வாழ்வை உயர்த்தும்!
   மகிழ்ந்தே..நீ யாற்று!
இன்மை துடைக்கும்! இனிமை யளிக்கும்!
   எங்கும்..நீ சாற்று!
தொன்மைக் கவிநான் சூட்டும் கவிகள்
   சுரக்கும்..தேன் ஊற்று!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire