vendredi 16 février 2018

விருத்த மேடை - 22   

விருத்த மேடை - 22
  
அறுசீர் விருத்தம் - 22
[கருவிளங்காய் 4 + புளிமா + தேமா] [நுாறெழுத்து விருத்தம்]
  
தீயோர்க்கு அஞ்சேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
கொடியவர்கள் கொலுவிருப்பார்! குலமழிப்பார்! குதித்திடுவார்!
   குவிப்பார் செல்வம்!
கொடி..யவர்கள் பிடித்திடுவார்! கொலைபுரிவார்! கொளுத்திடுவார்!
   குலைப்பார் நாட்டை!
அடியவர்கள் உருத்தரிப்பார்! அறமுரைப்பார்! அரசுறுவார்!
   அடிப்பார் கொள்ளை!
இடி..யவர்கள் என்றுரைப்பார்! நொடியளவும் இவர்செயலை
   எதிர்க்க அஞ்சேல்!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
விருத்த மேடை 3 ல், ஓரடிக்கு நான்கு காய், மா, தேமா என்ற வாய்பாட்டில் அமைந்த அறுசீர் இதுவாகும். இந்த நுாறெழுத்து விருத்தத்தில் காய் வரும் இடத்தில் கருவிளங்காய் மட்டுமே வரும், மா வருமிடத்தில் புளிமா மட்டுமே வரும்.
  
நான்கு கருவிளங்காயும், ஒரு புளிமாவும், ஒரு தேமாவும் ஓரடியில் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
ஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 25 எழுத்துகள் என்ற வகையில் இவ்விருத்தம் 100 எழுத்துகளைப் பெற்றிருக்கும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire